Wednesday, 20 April 2016

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்து வரும் முகவரி இல்லாத எல்லா நலம் விரும்பிகளுக்கும் நளனின் காதலும் கடந்து போகும் ஒரு சமர்ப்பணம்





முதல் பார்வையாளர்களுக்கான வெளியிட்ட புகைப்படமும் முன்னோட்டமும் பார்த்தவுடன் இந்த படத்தினை பற்றிய நல்ல உணர்வும் ஈர்ப்பும் வந்தது. முன்னோட்டத்தை பார்த்தவுடன் இயக்குனராகிய நலன் வெகுஜன பார்வையாளர்களுக்காக சில காட்சிகளை சேர்த்திருக்கிராரோ  என்று தோன்றியது அதனால் என்னுடைய ஈர்ப்பும் எதிர்பார்ப்பும்  குறையவில்லை.

நான் அண்மையில் பார்த்த படங்களில் காதலும் கடந்து போதும் சிறந்த படங்களில் ஒன்றாகும்.
இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு பல சமயங்களில் எதிர்பாராமல் உதவியவர்களும் நான் எனது பயணத்தில் சந்தித்த மனிதர்களின் நினைவுகளும் சற்று கடந்து சென்றது.

எனது பால்ய நண்பர்கள், என்னோடு பயிற்சி பெற்றவர்கள், கல்லூரி நண்பர்கள், என்னோடு பணி புரிந்த சகாக்கள், இப்படி சொல்லிக்கொண்டே போலாம். சிலரின் பெயர் கூட எனக்கு நினைவில்லை.

ஆம் நலன் குமாரசாமியின் காதலும் கடந்து போகும் அப்படி நமது வாழ்கையில் கடந்து சென்றவர்களை பற்றிதான், அப்படி கடந்து சென்றவர்களில் ஒருவருடன் கழித்த பொழுதுகளின் ஒரு அதியாயமாகதான் நான் இந்த படத்தை பார்க்கிறேன்.
இந்த படத்தை பார்த்த பின்பிலான எனது பிரதிபளிப்பு இதோ உங்களுக்காக.

கதிர்:

இவ்வுலகானது வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கானது  மட்டும் அல்ல. இவருள் அடங்காத தோல்வியை சந்தித்து வரும் எளிய மக்களும் இருக்கின்றனர். இன்று பலபேர் முன்னேற்றம் காணமுடியாமல் அவர்களது வாழ்க்கையை வாழ இயலாமல் என்றாவது ஒரு நாள் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்தி கொண்டு இருகின்றனர்.
சற்று பின்னோக்கி சென்றால் வசந்தபாலனின் வெயில் படத்தின் கதையின் நாயகனாக வரும் முருகேசன் என்ற கதாபாத்திரம் நினைவுக்கு வருகின்றது. ஆனால் அதில் தோல்வியின் வலி தாளாமல் துயரத்தின் மடியில் முருகேசன் காட்சியளிப்பார். ஒப்பீட்டுக்காக அல்ல ஒப்புமை கருதி நினைவு கூர்ந்தேன்.
சற்று மன திடம் கொண்டவர்கள்  இதை எல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை இயல்பானவர்களாக வெளிபடுத்தி கொண்டு  வருபவரும் இருக்கின்றனர் . கதையின் நாயகனாக வரும் கதிர் (எ) கதிரவனும் அப்படிதான் என்று எனக்கு புலன்பட்டது. இதற்க்கு அவரது குண்டர்களுடயான சேர்க்கையும் சிறைக்கூட அனுபவமும் காரணமாக இருக்க கூடும். :-)

யாழினி:

இதற்க்கு முந்தைய தலைமுறை வரை பெண்களுக்கு, தான் சம்மந்தப்பட்ட விஷயங்களை  தேர்ந்து எடுக்கும் உரிமை அநேகமாக மறுக்கபட்டே வந்தது. அவற்றுள் பள்ளிக்கூடம் வரை செல்பவர் சிலர், அதில் தேர்ச்சிபெற்று பட்ட படிப்பு வரை செல்பவர்கள் சிலர், அதில் வேலைக்கு சென்று பணியாளர்களாக அமருவோர் சிலர். அதில் சொற்பமாணவர்களே உத்தியோகத்தில் தொடர்ந்து ஊழியராக பணி புரிகின்றார்கள். இதிலும் மிக சொற்பமானவர்களே  தொழில் முனைபவர்களாக திகழ்கின்றனர். இவை அனைத்தும் ஒருவரது தனிப்பட்ட  விருப்பத்தையும் இலக்கையும், சமூக நிலையும், பொருளாதார நிலையையும்  பொருத்தது. ஆனால் இதில் பெரும்பாலானவர்களின் பெற்றோர்கள் மற்றும் கணவனுடைய தீர்மானமே பெண்கள் தேர்ந்தெடுப்பர் .
ஆனால் இப்பொழுது நிலை மாறிவிட்டது. பெற்றோர்களும் மாறி வருகின்றனர். இப்படி இருக்க சமீப காலத்தில் ஊழியர்களாகவும் மாணவிகளாகவும் விளங்கும்  பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியூர்  அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

அப்படிப்பட்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெற்றோர்களின் பிரதிநிதிகள்தான் யாழினியின் பெற்றோர்கள்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும் கனவும், சிறிது  நகர வாழ்கையின் மோகமும், நல்ல மதிப்பெண் இருந்தும் பெற்றோர்களின் தயக்கம் காரணமாக விழுப்புரத்திலேயே அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் தனது பட்ட படிப்பை முடித்த ஒரு பெண்ணாகவும், நல்ல வாய்ப்புக்களை தவற விடக்கூடாது  என்ற வைராக்கியதோடும் புத்திசாலிதனத்தோடும் இருக்கும் யாழினிதான் இப்படத்தின் கதாநாயகி.



மணிச்சுருக்கம்:

பெற்றோர்களை தனது சாதூர்யத்தினால் வென்று தனது கனவுலகத்தில் அடி எடுத்து வைத்து சதா ஒப்புரவு ஒழுகி, சேரிடம் அறிந்தும் அறியாமலும் சேர்ந்து, சிறிது பருவத்தையும் பயிர் செய்ய முற்படும்  பொழுது  வந்ததோர் செய்தி இவை அனைத்தும் நிரந்தரம் அல்ல என , ஆதலால் இருப்பிடத்திலிருந்து ஒற்றை பறவையாய்  அகம் சுருக்கி, இடம் பெற வீடு எடுக்க இயலாது,  நுண்மை நுகராமல் இடம் பெயர்ந்தாள்  யாழினி, வேண்டியதோர் வாய்ப்புக்கு வழி தேடும் பொழுது கிட்டிய அண்டை வீட்டார் கதிரோடு  கீழ்மை என அகற்றாது நட்புறவாடி சோம்பி திரியாது கிட்டிய பணி தாம்  செய்து வர சுய வாய்ப்புக்கோர் கண நேரத்தில் உதித்ததோர் எண்ணம், அவ்வெண்ணமோ பாம்பின் அறை சேர்த்தது, யாழினியோ தொன்மை மறவாது நேர்பட ஒழுகி வளையாமல் தக்கோனென வீடு திரும்பினாள்.  திரும்பியவள் நிகழ்ந்ததை  கதிருக்கு கதைக்க, சினம்கொண்டு பாம்பை ஓட்ட முற்படும் பொழுது அகப்பட்டு நீதி கேட்டு பேணுவோரிடத்து நிகழ்ந்ததை கதிர்  கதைக்க, பாம்பு  விரட்டப்பட்டது,  நாடியது கைக்கு எட்டாமல் போனதால் நொந்த யாழினி கதிருடன் பாணம் அருந்தி தனது  துயர் மொழிந்து தன்னிலை மறந்து கதிரோடு ஓரிரவு கழித்து அதை போற்றாது  உத்தமியாய் கதிருக்கு நேர்பட மொழிகிறாள்.

இவை ஒரு புறமிருக்க  பெரியார் என கருதி தோழமைக்காக சிறைவாசம் சென்று இயல்பு நிலைக்கு திரும்பிய பின் தொழில் முனையும் எண்ணத்தோடு அப்பெரியார் சொல்கேற்ப கிட்டிய பணியை செய்து பேதமையில் சினம்கொண்டு மாற்றான் பகையை சம்பாபித்து புதியதாய் கிட்டிய தோழிக்கு ஓர் கடின பொழுது வர யாழினி தன் வாழ்க்கை இலக்கிற்காக அரங்கேற்றிய நாடகத்தில் இனிதே பிடிபட்டார்கள் இருவரும்,

செய்வதென்னவென்று  தெரியாது நிற்கும் யாழினிக்கு வந்ததோர் நற்செய்தி, மீண்டும் அவள் தன் இலக்கினை அடைய கதிர்  இகழ்மை பாராமல் தன்னால் இயன்றவரை போராடி அந்த அறிய வாய்ப்பினை தக்க சமயத்தில் யாழினிக்கு சென்றடையுமாறு செய்து அவன் தன் பாதையில் கடந்து போகின்றான், மீண்டும் தீவினை செய்ய முற்படும் பொழுது மாற்றான் கையில் குருதி வழிய  கேட்பார்  இல்லாமல் சாலையோரம் காட்சியளித்தான் கதிர், 



நமது ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டு தினசரி நாம் பல உணர்சிகளையும் உணர்வுகளையும் கடந்து போகின்றோம். அதில் சுதந்திரம் என்னும் ஓர் உணர்வுக்காக மாண்டவர்கள் பலர். காரணம் நாம் நமது அன்றாட வாழ்வில் செய்ய நினைக்கும் காரியங்களை செய்யவோ அதனை அடையவோ இயன்ற வரை நமது தேர்வாகாவே இருக்கும் பொழுது கிடைக்கும் அலாதி சுகம் . வேண்டிய பொருளை வாங்குவது, பிடித்தவரோடு பேசுவது, பிடித்த பாடலை கேட்பது இப்படி சின்ன செய்வுகள் தொடங்கி உலகில் சுதந்திரத்தின் கோட்பாடுகள் பல சூழ்நிலைகளை பொருத்தது.
சுதந்திரம் என்னும் உணர்வும் விடுதலை என்ற நிலையும் ஒருவருடைய   உண்மையான இயல்பை சீர்படுத்துகிறது. உண்மையான இயல்போடு இருப்பவர்களின் மனம் நிறைவு பெறுகிறது. மனம் நிறைந்தால் முகம் மலரும். முகம் மலர்ந்தால் அவ்விடமும் செழிக்கும் . பிரபஞ்சம் உன்னதமாகும்.
ஆதலால் யாழினி அடைய நினைத்தது மன நிறைவைத்தான்  அதற்க்கு தன்னுள் உள்ள அடங்கா ஆர்வத்தை பீடமாக்கி சற்று அதில் பயணம் செய்துகொண்டிருக்கிறாள். அதில் வெற்றி வாகையும் சூடி கொள்கிறாள்.  
சுதந்திரம் என்னும் சுவை திகட்டாதது

இந்த கதையானது யாழினியின் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது.
சிறிது காலம் பழகியதுக்காக தன் தன்மானத்தையும் விற்று தனக்கு உதவிய கதிர்  அதற்க்கு பின்  எங்கும் காணமுடியவில்லை. சில வருடங்களுக்கு பின் ஒரு தருணத்தில் இருவரும் தற்செயலாக சந்தித்த பொழுது  அத்துடன் திரைப்படமும் தன் இறுதி காட்சியை சந்தித்தது.

படத்தின் பெயரில் காதல் இருந்தாலும், ஒரு காதல் காட்சியும் இல்லை. கதிரின் இயலாமையை கூட மிக கலகலப்பாக சொல்லிருக்கிறார் நளன், இந்த படம் கொரியன் படத்தின் தழுவாலாக இருந்தாலும் இந்த படத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மக்களின் நாயகனா
போட்டி போடும் கூட்டத்திற்கு நடுவில் கதையின் நயகானாக என்னை கவர்ந்து விட்டார் விஜய் சேதுபதி .
மடோனா செபாஸ்டியனும் அவர்க்கு ஒலி  சேர்க்கை தந்த பெண்மணியும் அசத்தி இருக்கியிருக்கிறார்கள்..

சமீபத்தில் கமல் கூறியது:
ஒரு படத்தின் ஒளிப்பதிவு மிக நன்றாக இருக்கிறது என்று யாரேனும் பாராட்டினால்,   ஒளிப்பதிவு சரியாக இல்லை என்று பொருள். ஏனெனில் ஒளிப்பதிவு தனியாக தெரியாமல் கதையோடு ஒன்றி இருக்க வேண்டும்.

இப்படத்தின் ஒளிபதிவும் பின்னணி இசையும் படத்துடன் ஒன்றி இருப்பதாகதான்  நான் எண்ணுகிறேன்,

தனக்கு கிட்டாத வாய்ப்பு தான் அக்கறை கொள்ளும் நபருக்கு கிடைக்கட்டும் என  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  உதவி செய்து வரும் முகவரி இல்லாத எல்லா  நலம் விரும்பிகளுக்கும் நளனின் காதலும் கடந்து போகும் ஒரு சமர்ப்பணம்.  


.

No comments:

Post a Comment