Sunday, 4 September 2016

உத்தம வில்லன் - கமலின் சிறந்த படைப்புகளில் ஒன்று

 உத்தம வில்லன் என்னை பாதித்த படங்களில் ஒன்று. வெகு நாட்களுக்கு பிறகு சில காட்சிகளில் கண் கலங்கினேன்.  அப்படி ஒரு  நெகிழ்ச்சியான படம்.

சில நினைவுகள்.
உதிரிப்பூக்கள் என்னும் திரைப்படத்தில் வரும் கடைசி காட்சி நினைவுக்கு வந்தது. தனது வாழ்நாள் முழுவதும் தன்வழிப்பாட்டு ஆளுமையின் ஒரு சான்றாக பிறரின் துன்பத்தில் ஆனந்தம் கண்டு இன்று தனது மறைவுக்கு முன் தனது பிள்ளைகளிடம் சில நிமிடத்திற்கு மென்மையான தருணத்தை செலவிடும் அந்த காட்சிதான்  அது. எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சக்காரர்களையும் கரைத்து விடும் தன்மையுடையது  மரணம் அடையும் முன் இருக்கும் தருணம்.




 காட்சியகத்தில் அமைந்துள்ள பார்வையாளர்களின் கண்ணோட்டத்திலிருந்து தோன்றும் ஆரம்ப காட்சி :


படத்தின் ஆரம்ப காட்சியிலேயே இன்றைய தமிழ் படத்தின் போக்கை பகடியாகவும் அதே  நேரம் நேர்த்தியாகவும் காண்பித்து உருவகத்தை புகுத்தி இருக்கிறார் கமல்.வெகு நாட்களுக்கு பிறகு கமல் டூயட் பாடும் காட்சியை பார்க்க முடிகிறது, இந்த பாடல்களின் அனைத்து அம்சங்களும் என்னை கவர்ந்தன,


"முத்தத்தின் ஆசானே முடிவுரை   செய்தாயோ  ............  பெரிதான
வேலைக்கு  புள்ளையார்  சுழி  தான்  முத்தம்  வாடி ...... மூளை  காரன்  பேட்டையில  மோசமான வேட்டை இது"

இரண்டு செய்திகள் மனோரஞ்சனையும் காட்சியாளர்களையும்  சென்றடைந்த விதம்.

முதல் செய்தியை ஜேகப் மனோரஞ்சனுக்கு சொல்லும் இடத்தில் உரையாடலின் ஒலி  ஓசையற்று இருக்கிறது. இந்த ரகசியம் செயற்கையாக இருக்க கூடாது என்று பார்வையாளர்கள் பார்க்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் இந்த உரையாடல் நடப்பது போல் காட்டி இருக்கிறார்கள், மேலும் பின்னணியில் ஆங்கில பாடல்  ஒன்று கேட்கிறது, ஐந்து நட்சத்திர விடுதியில் நடை பெற்று கொண்டிருக்கும் விருந்தினர் கூட்டம் நிறைந்தது என்பதின் உருவகம்.






தன வாழ்க்கையை புரட்டி போடும் அந்த இரண்டாவது  செய்தி என்ன வென்று மனோரஞ்சனுக்கு நேர்காலனின் முன்பே தெரிந்து விட்டது. அந்த தருணம் முதல் வாழும் ஒவ்வொரு தருணத்தையும் போற்றுவது போல் அவருடைய நேர்காணல் பதில் உள்ளது. ஆனால் அதை வசனங்களில்  பேசாமல், படத்தின் காட்சி பேசுகிறது. இதற்க்கு முன் நன்றாக பேசி கொண்டிருந்த அற்பனா திடீர் என்று ஏன் மது அருந்திவிட்டு உளருகிறாள் என்று காண்பவர்களுக்கு சிறிய ஆர்வத்தையும் பதட்டத்தையும் ஏற்படும் அந்த காட்சி.

பேசும் படம் என்ற  படத்தில் இந்த யுக்தியை படம் முழுவதும் கையாண்ட கமலுக்கு இது ஒரு பெரிய காரியமே இல்லை என்றாலும், இந்த காட்சியிலும் நிலைத்தன்மை மாறகூடாது என்று கமல் எடுத்து கொண்ட முயற்சிக்கு  அற்பனா கையில் இருக்கும் அந்த குப்பி ஓர் சான்று. அற்பனா மனோரஞ்சனின் மூலையில் கட்டி இருப்பதை சோதனை அறிக்கையின் மூலம் உணர்ந்து அந்த அதிர்ச்சியும் சோகமும் தாளாமல் மனோரஞ்சனின் கார்சட்டையில்ருந்து  தான் எடுத்த அந்த மதுபான குப்பியில் இருந்து தானும் குடித்துவிட்டு தன்னிலை மறந்து அழுகிறாள்  என்று மெல்ல நமக்கு புரிகின்றது.

நெஞ்சை நெகிழ வைக்கும் முதல் செய்தியின் விரிவு: 
ஜேகப் மிரட்டுவதற்காக வந்தவர் அல்ல, மாறாக மனோரஞ்சனுக்கு சொந்தமான மகளை அறிமுகம் செய்து வைப்பதற்கே   என்று பார்வையாளர்களுக்கு விளக்கும் வண்ணம் இந்த காட்சி அமைந்துள்ளது.
ஆரவராமான கட்சியிலிருந்து ஒரு மெல்லிய சோகம் இங்கே தெரியும். இந்த காட்சியில் கமலின் நடிப்பு மிக அழகாக அமைந்திருக்கும். உத்தமன் என கருதிய மனோரஞ்சன் வில்லனாகிறார், வில்லன் என நாம் நினைத்த ஜேகப் உத்தமனாகிறார்.



நெஞ்சை நெகிழ வைக்கும் இரண்டாவது  செய்தியின் விரிவு: 
 

   தனது ஆசையை கூற, அது வெறும் ஆசை அல்ல, கடைசி ஆசை என்று மார்கதரிசி உணரும் தருணம் பார்வையார்களுக்கு மனோரஞ்சன் மேல் அனுதாபமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தும்.. இருவரின் நடிப்பையும் ரசித்தேன்.
கமலின்  வசனங்கள் ஏன் ரசிக்கத்தக்கது என்று கேட்பவர்களுக்கு பின்வரும் வசனம் ஒரு சான்று.

"சாதாரணமா எனக்கு மனோதிடம் ஜாஸ்தி, ஆனா" .... என்று அர்ப்பனா சொல்லும்போது
மார்கதரிசி "எனக்கும் மனோதிடம் ஜாஸ்தி தான் ஆனா இந்த பய விஷயத்தில மட்டும் I love this rascal" என்று சொல்ல..
அர்ப்பனா: நானும் தான் என்று சொல்ல
மார்கதிரிசி: "யாருதான் லவ் பன்னல, Everybody loves him".

வசனங்களில் சாதுர்யமாக மனோ என்ற வார்த்தையை புகுத்தி குருவின் அன்பும் அர்ப்பனாவின் காதலும் வெளிபடுத்தி இருக்கும்







 மார்கதரிசி மனோரஞ்சனுடன் எடுத்த கொண்ட புகைபுடங்களை அருகில் வந்து அவர் கையால் வருட பழைய நினைவுகள் அவர்  அறியாமல் அசை போட மனோரஞ்சனின்  கோரிக்கை ஏற்கும் விதம் அருமை ,




பிரிந்த கலைஞர்கள்  இருவரும் கை  கோர்த்ததின் வெளிப்பாடாய் உத்தம வில்லன் என்னும் அடுத்த படைப்பு  பிறக்கிறது, இதன் வெளிப்பாடாய் சட்டென்று கட்சியின் பின்னணி மாறுகிறது. நம்முடன் வரலட்சுமியும் பூர்ணச்சந்திர ராவும் அந்த காணொளியை கண்டு வியக்கும் இடமும் அருமை.

இப்படி உத்தம வில்லனின் பார்க்க பார்க்க திகட்டாமல் ரசிக்கத்தக்க காட்சிகள் ஏராளம். அதை சொல்ல இன்னும் பக்கங்கள் தேவை.. ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் ஒரு அருமையான ஆழமான அர்த்தம் இருப்பதாக உணர்கிறேன்.
வெள்ளித்திரையில் தொடங்கி வெள்ளித்திரையிலேயே  முடிவடைகிறது திரைப்படம். சிகிச்சை அரங்கில் உயிர் பிரிந்தாலும் வெள்ளித்திரை  அரங்கில் தனது படைப்பின் மூலம் ஒருவன் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருப்பான்.

சக மனிதர்களுக்கு காண்பிக்கும் மனித நேயம், கலைஞனின்/கூத்தாடி(மரபு பெயர்)   மேல் மக்களுக்கு இருக்கும் பார்வையின் பரிணாம வளர்ச்சி, , வீர மங்கை வேலு நாச்சியார் போல் வீரமும் அறிவுத்திறன் படைத்த இளவரசி,  இன்றய திரைப்படத்தின் தரம், இன்றய தலைமுறையின் முதிர்ச்சி, மூட நம்பிக்கை, பகுத்து அறியாமல் மூடர்களாகவே திரியும் மனிதர்கள்,  மக்களின் காப்பாளனாக விளங்கும் தமிழரசன்,  பேராசை, பொருள்முதல்வாதம், தெய்யம், காணாமல் போன வில்லுப்பாட்டு,  என்று ஒரு படத்தில் பல சங்கதிகளை இப்படத்தில் அருமையாக கையாண்டுருக்கிறார்கள்.
படத்தின் அனைத்து சாரங்களும் என்னை கவர்ந்தன.


கதாபாத்திரங்களின் பெயர்கள்:

மனோரஞ்சன்: மனோரஞ்சன் என்றால் ஹிந்தியில் பொழுதுபோக்கு என்று பொருள்

பர்வீன் : மறைந்த ஹிந்தி நடிகை பர்வீன் பாபியை நினைவுபடுத்துகிறது

மார்கதரிசி :  மனோரஞ்சனுக்கு  திரைப்பட மார்கதிர்கான தரிசனத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்.

மனோன்மணி: யாமினி தனக்கு பிறக்கும் பிள்ளைக்கு   மனோரஞ்சன் நினைவாக வைத்த பெயர். மனோன்மணியம் என்னும் நாடகத்தின் நாடக தலைவியும்  , பாண்டியமன்னன் ஜீவகனின் அருமைப்புதல்வியுமாவாள்

மனோகர்: யாமினி தனக்கு பிறக்கும் பிள்ளைக்கு   மனோரஞ்சன் நினைவாக வைத்த பெயர். இந்த பெயருக்கு கவர்ச்சியானவன் என்றும் பொருள்.

ஆசையாய் கூப்பிட எனக்கு ஒரு மனோ வேண்டாமா? என்று யாமினி தனது இறுதி மடலிலும் குறிப்பிடுகிறாள்

யாமினி: ஹிந்தியிலும் சமஸ்க்ருதத்திலும் இந்த பெயருக்கு இரவு என்று பொருள். உறவில் எதையும் எதிர்பார்க்காமல் மனோரஞ்சனுடன் பாலுறவு வைத்ததின் உருவகமாக இருக்ககூடும்.  (One Night Stand). இவர்களின் உறவு ஊர் அறிய மணமேடை வரை செல்லாமல்  இருளிலேயே முடிந்ததின் உருவகமாகவும் இருக்ககூடும்.

யாம் இனி ஒன்றாக இருப்போம் என இத்தருவாய்  வரை நம்பும் யாமினி என மனோரஞ்சனுக்கு யாமினி எழுதிய கடிதத்தின் கடைசி வரி .

 அர்பணா: தன்னை மனோரஞ்சனுக்கு அர்ப்பணித்தவள் என்பதன் உருவகம்.

பூர்ணச்சந்திர ராவ் :  முழு நிலவான  பௌர்ணமியை குறிக்கும். பௌர்னமி அன்று நிலாவை காண்பவர்க்கு தங்களுள் இருக்கும் ஒரு பண்பானது விஸ்தரிக்கும். மனோரஞ்சனும் இவரோடு சேர்ந்த பின்பு வெகு ஜன மக்களை கவரும் வண்ணமாக பல படங்களில் நடித்து அவை வெற்றியும் பெற்றதாக படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வரலக்ஷ்மி: எல்லா செல்வ செழிப்பும் இருந்தும் கணவர் நலனுக்காக வரம் கேட்க்கும் ஒரு மனைவியின் உருவகம்.

100 வருடங்களுக்கு பின்பும்  இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களிடம் பாராட்டையும் வியப்பையும் உறுதியாக பெறும் என்பதை நான் திண்ணமாக உணர்கிறேன். .

உத்தம வில்லன் தரமான மற்றும் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதுகிறேன். மீண்டும் இது போல் ஒரு படைப்பிற்காக காத்திருக்கிறேன். 

No comments:

Post a Comment